நடிகர் ராமராஜன் மீண்டும் நாயகனாக நடிக்கும் படம், ‘சாமானியன்’. ராகேஷ் இயக்கும் இந்தப் படத்தில் நக்சா சரண், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி உள்பட பலர் நடிக்கின்றனர். எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில், ராமராஜன் பேசும்போது கூறியதாவது:

ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தேன். இப்போது ஹீரோவாகவே திரும்பி வந்துள்ளேன். எத்தனையோ கதைகள் கேட்டேன். எவ்வளவு கோடி கொடுத்தாலும் தரம் கெட்டுப்போய் மோசமானப் படங்களில் நடிக்க மாட்டேன்.

இந்தப் படத்தின் தலைப்பு கவர்ந்துவிட்டது. படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கும்போது கூட அதற்கென தனியாக ஒரு டைட்டில் வைக்க வேண்டும். முதல் குழந்தை பிறந்தபோது, நாள், ராசி, லக்னம், நேரம், கணித்து கண்ணன் என பெயர் வைத்துவிட்டு, இரண்டாவது குழந்தைப் பிறக்கும்போது ‘கண்ணன்-2’ என யாராவது வைப்பார்களா? அதென்ன 2? எத்தனையோ டைட்டில்கள் இருக்கிறது. அதை விட்டுவிட்டு இப்படி வைப்பது ஏன்? ‘கரகாட்டக்காரன் 2’ பண்ணலாம் என்று வந்தார்கள். வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

50 படம் நாயகனாக நடித்துவிட்டு பிறகு டைரக்ஷன் பக்கம் போகலாம் என்றுதான் முடிவுசெய்திருந்தேன். 2010-ல் விபத்து ஏற்பட்டுவிட்டது. பிறகு 5 படத்தை தள்ளுபடி செய்துவிட்டு, 45 படம் போதும் என்று முடிவு செய்தேன். இது 45-வது படம். முதல்முறையாக, எனது படம் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இவ்வாறு நடிகர் ராமராஜன் பேசினார்.

விழாவில், மலேசிய முன்னாள் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் குலசேகரன், நடிகர் ராதாரவி, இயக்குநர் நந்தா பெரியசாமி, பாடலாசிரியர் சினேகன், இயக்குநர் சந்தான பாரதி உட்பட பலர் பேசினர்.Source link

Leave a Reply

Your email address will not be published.