திரையுலகில் 25 வருடங்களை நிறைவு செய்த சூர்யா

06 செப், 2022 – 15:30 IST

எழுத்தின் அளவு:


Suriya-completed-25-years-in-cinema

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சூர்யா. நடிகர் சிவக்குமாரின் வாரிசு என்ற அடையாளத்துடன் 1997ம் ஆண்டில் செப்டம்பர் 6ம் தேதி வெளிவந்த ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். மணிரத்னம் தயாரிப்பு, வசந்த் இயக்கம், முதல் படத்திலேயே விஜய்யுடன் சேர்ந்து நடித்தது என அந்தப் படம் அவருக்கு தனி அறிமுகத்தைக் கொடுத்தது. படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் அழகான இளம் நடிகர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ளார் என பாராட்டுக்களைப் பெற்றார்.

அதற்குப் பின் சில சுமாரான படங்களில் கதாநாயகனாக நடித்தாலும் தனக்கான ஒரு பாதையைத் தேர்வு செய்ய முடியாமல் தவித்து வந்தார். அறிமுகப்படத்திற்குப் பின் நடித்த ஐந்து படங்கள் வெற்றியையும் பெறவில்லை, வரவேற்பையும் பெறவில்லை. மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடித்து வெளிவந்த ‘பிரண்ட்ஸ்’ படம் வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

அதற்குப் பின் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘நந்தா’ படம்தான் சூர்யா எப்படிப்பட்ட நடிகர் என்பதை ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் புரிய வைத்தது. தன் 25 வருட திரையுலகப் பயணத்தில் தன்னை அறிமுகம் செய்து வைத்த வசந்திற்கு அடுத்து இயக்குனர் பாலாவுக்குத்தான் சூர்யா பெரிய நன்றியைச் சொல்ல வேண்டும். ‘நந்தா’ படத்திற்குப் பிறகே சூர்யாவைத் தேடி இயக்குனர்கள் போக ஆரம்பித்தார்கள். அதில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘காக்க காக்க’ படம் சூர்யாவை ஒரு கமர்ஷியல் நடிகராகவும் உயர வைத்தது.

கடந்த 25 வருடங்களில் பல்வேறு படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், ‘காக்க காக்க – அன்புச் செல்வன்’, ‘பிதா மகன் – சக்தி’, ‘பேரழகன் – பிரேம்குமார் என்கிற சின்னா’, ‘கஜினி – சஞ்சய் ராமசாமி’, ‘சில்லுனு ஒரு காதல் – கௌதம்’, ‘வாரணம் ஆயிரம் – கிருஷ்ணன், சூர்யா’, ‘அயன் – தேவா’, ‘ஆதவன் – முருகன்’, ‘சிங்கம் – துரைசிங்கம்’, ‘ஏழாம் அறிவு – போதிதர்மன், அரவிந்த்’, ‘சூரரைப் போற்று – நெடுமாறன்’, ‘ஜெய் பீம் – சந்துரு’, ‘விக்ரம் – ரோலக்ஸ்’ ஆகிய படங்களும், கதாபாத்திரங்களும் மறக்க முடியாதவை.

அதிகமான படங்களில் நடிக்க வேண்டும் என இந்த 25 வருடங்களில் சூர்யா நினைத்தது போலத் தெரியவில்லை. சிறந்த கதையில், கதாபாத்திங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையே வெளிப்பட்டுள்ளது.

இத்தனை வருடங்களில் சில பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் ‘சூரரைப் போற்று’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றுள்ளார். அவருடைய திரையுலகப் பயணத்தின் 25வரு வருடத்தில் நாட்டின் சிறந்த திரைப்பட விருது அவருக்குக் கிடைத்திருக்கிறது.

சினிமாவில் நடித்தோம், சம்பாதித்தோம் என்றில்லாமல் சினிமாவிலேயே தன்னுடைய முதலீட்டைப் போட்டு படங்களைத் தயாரித்தும் வருகிறார்.

அவரது நடிப்பில் அடுத்து பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’, சிவா இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் தேர்வாகவே உள்ளன. வாரிசு நடிகர் என்ற அடையாளத்துடன் அறிமுகமானவர், அதைத் தகர்த்தெறிந்து, தன்னுடைய முயற்சியாலும், பலத்த போட்டிக்கிடையிலும், தொடர்ந்து சினிமாவில் 25 வருடங்கள் வெற்றிகரமாகப் பயணிப்பது சாதாரண விஷயமல்ல.

கனவு காணுங்கள்… நம்புங்கள்
திரையுலகில் தன்னுடைய 25 வருடப் பயணம் குறித்து, “உண்மையிலேயே அழகான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட 25 ஆண்டுகள். கனவு காணுங்கள்… நம்புங்கள்…,” என பதிவிட்டுள்ளார் சூர்யா.

Source link

Leave a Reply

Your email address will not be published.