காவல் உதவி ஆய்வாளர் பாரி வெங்கட்டின் (அருண் விஜய்), காதல் மனைவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்படுகிறார். அவர் உடலருகே இன்னொரு ஆணின் சடலமும் கிடக்கிறது. இதனால் தகாத உறவால் இருவரும் கொல்லப்பட்டதாக வழக்குப் பதிவு செய்கிறார், பாரிக்கு பிடிக்காத ஆய்வாளர். ஆத்திரமடையும் பாரி, அவருடன் மோத, சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். பிறகு உண்மை அறிந்து அவரிடமே வருகிறது அந்த வழக்கு. மனைவியைக் கொன்றவர்களை அவர் எப்படி கண்டுபிடித்தார்? என்ன செய்தார் என்பதுதான் படம்.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் நியாயமாக ’சினம்’ கொள்ளத் தூண்டும் கதையை, சினிமாத்தனம் அதிகமின்றி இயல்பாகக் கொடுத்திருக்கிறார், இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன். திரைக்கதையும் அருண் விஜய்யின் தேர்ந்த நடிப்பும் ஷபீரின் இசையும் அவரின் கதைக்கு தூண் போல துணை நிற்கின்றன.

அருண் விஜய்யை, பல படங்களில் போலீஸாக பார்த்திருந்தாலும் இதில் வேறு மாதிரி. அவர் உடலமைப்பும் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பும் அந்த கேரக்டருக்கு அப்படியே பொருந்துகிறது. மனைவியின் உடலை கையில் தூக்கியபடி கதறும்போதும், குற்றவாளிகள் பற்றிய ஆதாரம் கிடைக்காமல் தவிக்கும்போதும், கடைசிக் கட்டத்தில், வெறிகொண்டு வேட்டையாடும் போதும் அருண் விஜய் பாரி வெங்கட்டாகவே மாறியிருக்கிறார்.

அவருக்குத் தோழனாக, ஏட்டு காளி வெங்கட். ஒவ்வொரு படத்திலும் நடிப்பில் தன்னை மெருகேற்றி வரும் அவர் இதிலும் அப்படியே. அருண் விஜய் மனைவியாக நடித்திருக்கும் பாலக் லால்வாணிக்கு அதிக வேலையில்லை என்றாலும் கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார்.

மறுமலர்ச்சி பாரதி, தமிழரசன், பாலமுரளி வர்மன், மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர் என அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கோபிநாத்தின் ஒளிப்பதிவு சென்னை புறநகரின் இருட்டுப் பகுதிகளை இயல்பாகக் காட்டி, படத்துக்குப் பலம் சேர்க்கிறது. ஷபீரின் பின்னணி இசை, த்ரில்லருக்கான பதைபதைப்பைத் தந்திருக்கிறது. வழக்கமாக இதுபோன்ற படங்களுக்கு இருக்க வேண்டிய வேகமான திரைக்கதை, கொஞ்சம் மிஸ்சிங். விசாரணை பற்றிய காட்சிகள் மெதுவாக நகர்வதால் ஒரு கட்டத்தில் சோர்வை தருவதைத் தடுக்க முடியவில்லை.

சமூகத்தில் நடக்கும் கொடுமைகள் கண்டு, ‘எனக்கென்ன?’ என்று ஒதுங்காமல், சினம் கொள்ள வேண்டும் என்பதைச் சொல்கிறார்கள். அதற்காகப் பழிவாங்குவதை ஊக்குவிக்கும் ஹீரோவின் நியாயத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா? இதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், போலீஸ் நடைமுறைகளுக்கும் தனி மனித உணர்ச்சிக்கும் இடையில் அல்லாடும் சராசரி மனிதனின் சினத்தைக் கச்சிதமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த த்ரில்லர்!Source link

Leave a Reply

Your email address will not be published.