ஸ்காட்லாந்து இளவரசர், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் எனசர்வதேச அளவில் முக்கிய புள்ளிகளை, கொலை செய்கிறார் கொல்கத்தாவில் வசிக்கும் கணிதஆசிரியர் மதி (விக்ரம்). கொலையாளியை கண்டு பிடிக்க, இந்தியா வருகிறார், இன்டர்போல் அதிகாரி அஸ்லான் (இர்பான் பதான்). துப்புக் கிடைக்காமல் அவர் அல்லாடும் நேரத்தில், மதி பற்றிய தகவல்களை, இணையத்தில் கசிய விடுகிறார் மர்ம நபர் ஒருவர். அவருக்கும் மதிக்கும் என்ன தொடர்பு? அஸ்லானும் காவல் துறையும் கொலையாளியை கண்டுபிடித்தார்களா என்பது கதை.

ஒரு கணித ஆசிரியர் சர்வதேசப் புள்ளிகளை கொலை செய்கிறார் என்பதைக் கொண்டு எவ்வளவு சுவாரசியமான திரைக்கதையை அமைத்திருக்க முடியும், ஆனால், கோட்டை விட்டிருக்கிறார், இயக்குநர் அஜய் ஞானமுத்து! குறிப்பாக இரண்டாம் பாதியில் ‘யார் மதி? யார் கதிர்?’ என்பதில் ஏகப்பட்ட குழப்பம்.

நாயகன் தனது ஆழமான கணித அறிவின் துணைகொண்டே கொலைகளைச் செய்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதைக் கண்டறிந்து சொல்லும் கணிதக் குட்டிப்புலியாக வரும் ஜூடியின் (மீனாட்சி)வழியே, கணிதம் தொடர்பான நுணுக்கமான தகவல்கள் அடுக்கப்படுகின்றன. அவை சுவாரசிய காட்சிகளாக உருப்பெறாமல்போனது பரிதாபம்.

படத்தில் பிரமிப்பான அம்சம், காட்சியமைப்புகள். ஸ்காட்லாந்து இளவரசர், ரஷ்ய அமைச்சர் ஆகியோரைக்கொல்லும் காட்சிகள், தர்க்கப் பிழைகளை மறந்து ரசிக்க வைக்கின்றன.வெளிநாட்டு லொகேஷன்களைபுதிய கோணத்தில் காட்சிப்படுத்திய விதம், நாயகன் மனப்பிறழ்வாகத் தோன்றுவதைச் சித்தரித்தது ஆகியவற்றில் சிறந்த படமாக்கம் ஈர்க்கிறது.

இரண்டாம் பாதியில் வைக்கப்பட்டுள்ள திருப்பங்கள், ஆக்‌ஷன் பிளாக்குகள் மட்டுமல்ல, காதல் காட்சிகளிலும் புதுமையில்லை.

விக்ரம் பல ‘கெட்டப்’புகளில் தோன்றுகிறார். அவர் உழைப்பும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியவை. உணர்வுபூர்வகாட்சிகள், மனப்பிறழ்வுக் காட்சிகளில்அவர் உரையாடும் நடிப்பு வியக்கவைக்கிறது. பாவனாவாக வரும்நிதி, காதலன் தன்னைப் புறக்கணிக்கிறானா, அரவணைக்கிறானாஎன்பதை அறிந்தும் அறியாமல் அல்லாடும் கதாபாத்திரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

இன்டர்போல் அதிகாரி இர்ஃபான்பதான், அறிமுகம் என்று நம்ப முடியாதபடி அசத்தியிருக்கிறார். கார்ப்பரேட் திமிரை வெளிப்படுத்தியிருக்கும் ரோஷன் மேத்யூவின் பங்களிப்பும் அசத்தல். கண்களை மூடிக்கொண்டு வெட்டித் தள்ளியிருக்க வேண்டிய பலகாட்சிகளை புவன் சீனிவாசன், ஜான் ஆபிரகாம் என 2படத்தொகுப்பாளர்கள் பணிபுரிந்தும் கண்டும் காணாமலும் விட்டது அயர்ச்சி.

படத்துக்கு பிரம்மாண்டத் தோற்றத்தைக் கொடுப்பதில் ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு உதவியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘அதீரா’, ‘தும்பித் துள்ளல்’ பாடல்களை ரசிக்க முடிகிறது.

இரட்டை வேடக் கதைகளுக்கு திரைக்கதையில் இருக்க வேண்டியதெளிவும் நுணுக்கமும் பின்கதையில் இருக்க வேண்டிய சுவாரசியமும் மிகவும் பலவீனமாக இருப்பதால், பெருச்சாளியை விழுங்கிவிட்டு செரிமானம் ஆகாமல் சுருண்டு கிடப்பதுபோல் சீற மறந்துவிட்டது இந்த ‘கோப்ரா’.

Source link

Leave a Reply

Your email address will not be published.