இசைக் கலைஞன் ஆதி (சர்வானந்த்), வீட்டு புரோக்கர் பாண்டி (ரமேஷ் திலக்), தனது திருமணத்துக்குப் பெண் தேடும் கதிர் (சதீஷ்) மூவரும் நண்பர்கள். இளமையிலேயே அம்மாவை இழந்த ஆதிக்கு ஒரு ஏக்கமும், மற்ற இருவருக்கும் தனிப்பட்ட அபிலாசைகளும் இருக்கின்றன. இந்த நேரத்தில் கால இயந்திரத்தை உருவாக்கிய ரங்கி குட்டப்பாலை (நாசர்)சந்திக்கிறார்கள். ‘காலம் உங்களுக்கு மறுத்த இரண்டாவது வாய்ப்பை, என் கால இயந்திரம் உங்களுக்குத் தரும். அதன் மூலம் கடந்த காலத்துக்குப் பயணித்து உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்; என் விரும்பம் ஒன்றையும் நிறைவேற்றித் தாருங்கள்’ என்கிறார். அதை ஏற்று கடந்த காலத்துக்குப் பயணிக்கும் மூவரும் அங்கே யாரையெல்லாம் சந்திக்கிறார்கள்? மாற்ற விரும்பினார்கள்? குட்டப்பாலின் கோரிக்கையை நிறைவேற்றினார்களா? என்பது கதை.

வாழ்க்கையின் போக்கில் நிகழ்ந்துவிடும் பல முக்கியச் சம்பவங்கள், இழப்புகளை மாற்றியமைக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இந்த ஏக்கத்தை சாத்தியமாக்கும் கற்பனைக்கு ‘தாய்மை’ எனும் உலக உணர்வின் வழியாக உயிர்கொடுக்க முயன்று வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகார்த்திக். வாழ்க்கையின் அர்த்தமும் அதன் ஆதார சுருதியும் நிகழ்காலத்தின் ஒவ்வொரு கணத்தையும் வாழ்வதில்தான் இருக்கிறது என்கிற தத்துவத்தை உணர்வுகளால் கட்டியெழுப்பிய ‘கூஸ் பம்ப்’ காட்சிகளின் வழியாகச் சித்தரித்திருக்கிறார்.

நாயகன், அவன் நண்பர்கள், தாய், தந்தை, காதலி, விஞ்ஞானிகள் என மனதில் தங்கும் கதாபாத்திரங்களின் உலகைச் சித்தரித்த விதம், ‘நாஸ்டால்ஜிக்’ பயணத்துக்குள் அழைத்துச் சென்று கடந்த கால நினைவுகளைக் கிளரும்படி செய்கிறது.

20 ஆண்டுகள் பின்னோக்கிய பயணத்தில் தங்களையே சிறுவர்களாகச் சந்தித்துப் பழகும் 3 நண்பர்களும் எதிர்கொள்ளும் திருப்பங்கள் திகட்டாத வண்ணம் அமைக்கப்பட்டிருப்பதும் சரியான கால அளவுக்குள் படம் அடங்கிவிடுவதும் சுகமான திரை அனுபவத்தை தருகின்றன.

சர்வானந்த், நாசர், அமலா, ரிது வர்மா, ரமேஷ் திலக், சதீஷ், ரவீந்தர், சிறார் நடிகர்கள் அனைவருமே ஈர்த்துவிடுகிறார்கள். குட்டப்பாலும் மைக்கேலும் இணைந்து முதலில் உருவாக்கிய கால இயந்திரத்தின் வடிவம் எப்படியிருந்தது, 20 ஆண்டுகள் கழித்து அதன் முன்னேறிய வடிவம் எப்படியிருந்தது என்பதை சித்தரித்த விதத்தில் நம்பகத் தன்மையை உருவாக்கிவிட்டது தொழில்நுட்பக் குழு.

ஜேக் பிஜாயின் இசை ஒரு கதாபாத்திரமாக படம் முழுவதும் இழைகிறது. ‘ஒரு முறைப் பாரம்மா’ பாடல் திரையரங்கை விட்டு வெளியேறிய பின்னும் மனதுள் ஒலிக்கிறது.

சதீஷ்குமாரின் நேர்த்தியான கலை இயக்கமும் 1998, 2019 கால கட்டங்களை உணர்த்தும் சுஜித் சரங்கின் ஒளிப்பதிவும் இயக்குநரின் கற்பனையை சாத்தியமாக்கித் தந்திருக்கின்றன.

முதல் பாதி கொஞ்சம் இழுத்தாலும், மனித உணர்வுகளை இணைக்கும் ‘டைம் ட்ராவல்’ படத்தை தமிழ் சினிமாவால் தர முடியும் என்பதற்கு பெருமைமிகு உதாரணம் ‘கணம்’.Source link

Leave a Reply

Your email address will not be published.